Sunday, 1 January 2012

ஸ்ரீ அருணகிரிநாதரின் திருப்புகழ் - பாடல் 6 முத்தைத்தரு

முத்தைத்தரு பத்தித் திருநகை
     அத்திக்கிறை சத்திச் சரவண
          முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும் 

முக்கட்பர மற்குச் சுருதியின்
     முற்பட்டது கற்பித் திருவரும்
          முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப் 

பத்துத்தலை தத்தக் கணைதொடு
     ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
          பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப் 

பத்தற்கிர தத்தைக் கடவிய
     பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
          பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே 

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
     நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
          திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத் 

திக்குப்பரி அட்டப் பயிரவர்
     தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
          சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக் 

கொத்துப்பறை கொட்டக் களமிசை
     குக்குக்குகு குக்குக் குகுகுகு
          குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை 

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
     வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
          குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே. 




முத்தைத் தரு = முத்தை ஒத்த
பத்தித் திருநகை = ஒழுங்காகவும் அழகாகவும் அமைந்த (இள)நகையுடைய
அத்திக்கு இறை = தெய்வயானையின் தலைவரே
சத்திச் சரவண = சக்திவேற்படை தாங்கிய சரவணா
முத்திக்கு ஒரு வித்து = மோட்சத்திற்கு மூலவித்தே
குருபர = குருமூர்த்தியே
முக்கண் பரமற்கு = மூன்று கண்களையுடைய பெரிய பொருளாகிய சிவனுக்கு
சுருதியின் முற்பட்டது = வேதங்களுக்கு முதன்மையான “ஓம்” எனும் தனி மந்திரம்
இருவரும் = பிரமன், திருமால் ஆகிய இருவரும்
முப்பத்து முவர்க்கத்து அமரரும் = முப்பத்து முக்கோடி தேவர்களும்
அடிபேணப = திருவடி வணங்க
தித்தித்தெய ஒத்த = “தித்தித்தெய” எனும் ஒலிக்கு இசைய
பரிபுர = சிலம்புகள் அணிந்த
நிர்த்த பதம் வைத்து = நடனஞ் செய்கின்ற திருவடிகளை வைத்து
பயிரவி = காளி
திக்கு ஒக்க = திசைகளில் பொருந்துமாறு
நடிக்க = தாண்டவம் செய்ய
கழுகொடு கழுதாட = கழுகுகளோடு பேய்கள் சேர்ந்து ஆடவும்
திக்கு = 8 திக்குகளிலிருந்து
பரி அட்டப் பயிரவர் = உலகங்களைத் தாங்கும் பைரவர்கள் 8 பேரும்
சித்ரப் பவுரிக்கு = அழகிய கூத்துக்கு
தொக்குத்தொகு தொக்குத் தொகு தொகு த்ரிகடக எனவோத = தொக்குத்தொகு தொக்குத் தொகு தொகு எனும் ஓசையைக் கூறவும்
கொத்துப்பறை கொட்ட = கூட்டமாகப் பற்பல பறைகளை முழக்கவும்
களமிசை = போர்க்களத்தில்
குக்குக்குகு குக்குக் குகுகுகு = எனும் ஓசையோடு
முதுகூகை = முதிய கோட்டான்
குத்திப்புதை புக்குப் பிடியென = குத்திப்புதை புகுந்து பிடி எனக் குழறவும்
கொட்பு உற்றுஎழ = சுழலும் தன்மை கொண்டு மேலே எழ
நட்பு அற்ற அவுணரை = நட்பை மறந்த அசுரரை
வெட்டிப்பலியிட்டு = கொன்று பலி கொடுத்து
குலகிரி = அசுரர் குலத்துக்கு இயைந்து நின்ற கிரவுஞ்ச மலை
குத்துப்பட = குத்துப்பட்டு அழிந்து போகும்படி
ஒத்துப் பொரவல = அறப்போர் செய்யவல்ல
பெருமாளே = பெருமையிற் சிறந்தவரே
பத்துத்தலை தத்த = இராவணனின் 10 தலைகளும் சிதறிவிழ
கணைதொடு = இராம அவதாரமெடுத்துக் கணை தொட்டு
ஒற்றைக்கிரி = ஒப்பற்ற மந்திரமலையை
மத்தைப் பொருது = மத்தாக்கிக் கூர்மாவதாரம் எடுத்துத் திருப்பாற்கடலைக் கடைந்து
ஒரு பட்டப்பகல் = பகல் பொழுது ஒன்றை
வட்டத் திகிரியில் = வட்டமான சக்கராயுதத்தால்
இரவாக = இரவு ஆகும்படி செய்து
பத்தற்கு = அருச்சுனனாகிய பக்தனுக்கு
இரதத்தைக் கடவிய = அன்பினால் தேரோட்டியாக வந்து
பச்சைப்புயல் = பசும் நீலமேக வண்ணனாகிய திருமால்
மெச்சத் தகுபொருள் = மெச்சத்தகும் பெரும் பொருளே!
பட்சத்தொடு = அன்போடும் அருளோடும்
ரட்சித் தருள்வதும் = காத்து அருள் புரிவதாகிய
ஒருநாளே = ஒரு நாளும் உள்ளதோ?
-நன்றி: திருமுருக கிருபானந்த வாரியார்
(இதைவிடத் தெளிவாக விளக்குதல் கடினம் என்பதால் இதையே நாம் ஈந்தோம்)

1 comment:

  1. Dear Sir
    I have seen your blog. You have touched varied subjects of common interest. My mail Id is edviswanath1958@gmail.com
    If you can communicate me we can have further sharing of knowledge
    Regards
    E.D.Viswanath

    ReplyDelete